நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும், விடுமுறைகள் குறைக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் வைர விழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உரையாற்றினார்.அப்போது,இன்று நமது தேசத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணம் என்றும், உச்ச நீதிமன்றம் 1950 ஜனவரி 28ம் தேதி தொடங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உச்ச நீதிமன்றம் ஏற்கனவே மேற்கொண்ட பல்வேறு டிஜிட்டல் முயற்சிகளை எடுத்துரைத்து, விரைவில் அதன் டிஜிட்டல் தரவை கிளவுட் அடிப்படையிலான உள்கட்டமைப்புக்கு மாறப் போகிறது என்பதை வெளிப்படுத்தினார். நாட்டின் நீதித்துறை தரவுகளை நிகழ்நேரத்தில் கண்காணிக்கும் வகையில், தொழில்நுட்பத்தை மேம்படுத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கோவிட் காலத்தில் காணொளி வாயிலாக வழக்கு விசாரணைகள் நடைபெற்றது. நாட்டின் எந்தப் பகுதியிலும், அமர்ந்திருக்கும் எந்தவொரு இந்திய வழக்கறிஞரும் வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிமன்றத்தில் வாதிடலாம்.
இது உச்ச நீதிமன்றத்தை அணுகுவதை ஜனநாயகப்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.ஒரு பட்டனை கிளிக் செய்வதன் மூலம் வழக்குகளைத் தாக்கல் செய்யும் வசதி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். விடுமுறைகள் குறைக்கப்பட வேண்டும் என்றும், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைவாக தீர்வு காண வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
நாம் ஒத்திவைப்பு கலாச்சாரத்திலிருந்து வெளியேறி தொழில்முறையாக இருக்க வேண்டும். வாய்வழி வாதங்கள் நீதித்துறை முடிவை தாமதப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சட்ட வல்லுநர்கள் முதல் தலைமுறை வழக்கறிஞர்களுக்கு ஒரு சமமான களத்தை வழங்க வேண்டும் என்றும் சந்திரசூட் குறிப்பிட்டார்.