ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு திமுக ஆட்சி உதாரணம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற என் மண் என் மக்கள் பயணத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று உரையாற்றினார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று, அயோத்தி ஸ்ரீராமர் கோவிலுக்கு, தமிழகத்தில் இருந்து ரயில் சேவைகளை வழங்கியுள்ளார். தமிழகத்தின் ஒவ்வொரு முக்கிய நகரத்தில் இருந்தும், கடந்த 20 நாட்களாக ஒரு ரயிலில் இரண்டாயிரம் தமிழ் மக்கள் அயோத்திக்குச் செல்கிறார்கள். உணவு, தரிசனம், பயணக் கட்டணம் அனைத்தும் மத்திய அரசே ஏற்றுக் கொள்கிறது. தமிழகத்தில் இருந்து அனைவரும் சென்று அயோத்தியில் நம்முடைய குழந்தை ராமரை தரிசனம் செய்து விட்டு வருகிறார்கள்.
ஆனால் திமுக, உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மக்களை திட்டிக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக உத்தரப்பிரதேசம் முன்னேறியிருக்கிறது. தமிழகம் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் ஒரு முக்கிய பொருளாதார மாநிலமாக முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்றால், அது திமுகவால் முடியாது. எந்தத் தொலை நோக்குச் சிந்தனையும் திமுகவிடம் கிடையாது. கடந்த 33 மாத காலமாக திமுக ஆட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு இலக்கணமாக திமுகவின் ஆட்சி இருக்கிறது. கடன் வாங்கிய மாநிலங்களில் இந்தியாவில் முதல் இடம். மது விற்பனை மூலமாக இந்த ஆண்டு வருமானம் ரூ 44,000 கோடி. இவர்களால் எந்த பிரயோஜனமும் கிடையாது. 511 தேர்தல் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள் முழுமையாக 20 தேர்தல் வாக்குகளை கூட நிறைவேற்ற முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.
சமையல் எரிவாயுவிற்கு ரூ.100 மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, கல்விக்கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி, நூறு நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக மாற்றுவோம் என்றது, அனைத்து மகளிருக்கும் ₹1000 உரிமைத் தொகை, மாணவர்களுக்கு கைக்கணினி, என எந்த வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றாமல், ஏற்கனவே இருந்த நலத்திட்டங்களையும் நிறுத்தியதுதான் திமுக அரசின் சாதனை. நிலைமை இப்படி இருக்க, நமது முதலமைச்சர் அவர்கள் எந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதே தெரியவில்லை. 99% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று பொய் கூறிக்கொண்டிருக்கிறார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு, பாஜக 295 தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்தது. அந்த 295 வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டு, 2024 தேர்தலைச் சந்திக்கிறது. திமுக கொடுத்த 511 தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனையை நிறைவேற்றியிருக்கிறது என்பதை ஒவ்வொன்றாகக் கூறத் தயாரா? காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் உட்கட்டமைப்புக்கு செலவு செய்தது ரூ.2 லட்சம் கோடி. இன்று நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் ஆட்சியில், ரூ.11 லட்சம் கோடியை நாட்டின் உட்கட்டமைப்பிற்கு செலவு செய்திருக்கிறோம்.
மொழியை மட்டும் மூலதனமாக வைத்து திமுக இங்கு அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறது. மதுரை அமைச்சர் மூர்த்தி, ஜீ ஸ்கொயர் என்ற ஒரே ஒரு நிறுவனத்திற்காக மொத்த பத்திரப்பதிவு துறையையும் கைகட்டி வேலை செய்ய வைக்கிறார். பத்திரப்பதிவு துறையில் பணி நீக்கத்தை ரத்து செய்ய ஒரு கட்டணம், இடமாற்றத்துக்கு ஒரு கட்டணம் என ஒவ்வொன்றுக்கும் வசூல் வேட்டை நடக்கிறது.
இப்படி வசூல் செய்த பணத்தில்,மதுரையில் ஒரு பிரம்மாண்ட மால் கட்டிக்கொண்டு இருக்கிறார் என்ற செய்தி அறிந்தோம். இந்த ஊழல் பெருச்சாளிகள் அனைவரையும் மக்கள் ஒழித்துக் கட்ட வேண்டிய நேரம் இது.
ஊழல், குடும்ப அரசியலை ஒழிக்கவில்லை என்றால், நம்முடைய குழந்தைகள் இந்த மண்ணில் நிம்மதியாக வாழ முடியாது. அரசியல் வாரிசுகள் வரிசையாக வருவார்கள். ஊழல் என்பது தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து கொண்டிருக்கும். ஊழல் செய்யக்கூடிய குடும்பங்கள் எதுவும் அரசியலில் இருக்கக் கூடாது. இதை ஒரு வேள்வியாகவே பாஜக முன்னெடுக்கும்.
வரும் 2024 பாராளுமன்ற தேர்தல், தமிழகத்தின் அரசியல் மாற்றத்திற்கான தேர்தல். எந்த வேலையும் செய்யாத கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு வேண்டாம். ஊழல் குடும்ப அரசியல் நமக்கு வேண்டாம். ஓய்வின்றி உழைக்கும் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கரங்களை வலுப்படுத்த, அடுத்து வரும் நாட்களில் நாம் அனைவருமே நமது பிரதமர் மோடியை போல ஓய்வின்றி உழைத்து, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம். 2026 அரசியல் மாற்றத்திற்கு வித்திடுவோம் என அண்ணாமலை தெரிவித்தார்.