அரசியலுக்கு பலியாகி இருந்த ரயில்வே துறை3, தற்போது எளிதாக பயணிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று சுமார் 41,000 கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரயில்வே உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும், நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
நாட்டில் முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு அம்ரித் பாரத் ரயில் நிலையம் திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. முதல்கட்டமாக கடந்த ஆண்டில் 508 ரயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மேம்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் சுமார் 41,000 கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரயில்வே உள்கட்டமைப்புத் திட்டங்களை வீடியோ கான்பரன்சிங் வாயிலாக தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும், நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
தமிழகத்தில் சென்னை கடற்கரை, பூங்கா, அம்பத்தூர், பரங்கிமலை, கிண்டி, மாம்பலம், மேட்டுப்பாளையம், கோவை வடக்கு, ஈரோடு, மொரப்பூர், திண்டுக்கல், தூத்துக்குடி, திருச்செந்தூர், மயிலாடுதுறை, கும்பகோணம், விருத்தாச்சலம், தர்மபுரி, ஒசூர் உள்ளிட்ட 34 ரயில் நிலையங்கள் உலகத்தரத்தில் மேம்படுத்தப்பட உள்ளன.
விழாவில் பேசிய பிரதமர் மோடி, பாரதம் தற்போது பெரிய கனவுகளை காண்கிறது. அதனை அடைய இரவும் பகலும் உழைக்கிறது என தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் புதிய இந்தியா கட்டப்படுவதை மக்கள் பார்த்துள்ளனர். வந்தே பாரத் ரயில்கள் தொடங்குதல், தூய்மை மற்றும் தண்டவாளங்களை மின்மயமாக்குதல் உள்ளிட்ட ரயில்வேயில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை சுட்டிக் காட்டினார்.
முந்தைய அரசாங்கங்கள் பொதுப்பணத்தை கொள்ளை அடித்ததாகவும், அது பாஜக ஆட்சியில் நிறுத்தப்பட்டு சம்பாதித்த ஒவ்வொரு பைசாவும் ரயில்வே சேவைகளை விரிவுபடுத்தப் பயன்படுத்தப்பட்டதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
இந்திய ரயில்வே துறை அரசியலுக்கு பலியாகி இருந்தது, ஆனால் தற்போது அதுவே எளிதாகப் பயணம் செய்வதற்கான முக்கிய அடிப்படையாக உள்ளது என்றும், அது ஒரு பெரிய வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனமாக உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இளைஞர்களின் கனவுகளும், கடின உழைப்பும் எனது உறுதியும் விக்சித் பாரத் உத்தரவாதம் என்றும் அவர் கூறினார்.
இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் அஸ்வின் வைஷ்ணவ், ராவ் சாககேப் பாட்டில் தன்வே, தர்ஷனா ஜர்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாடு முழுவதும் மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். சென்னை பரங்கிமலையில் நடைபெற்ற த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.