மேற்கு வங்கத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் அரசு செயல்படுத்தவில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது, “மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல், மோசமான சட்டம் ஒழுங்கு மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகியவை அதிகரித்துள்ளது. இது மாநிலத்தை தனிமைப்படுத்தி காட்டுகிறது.
சந்தேஷ்காளி மற்றும் அதன் குற்றங்கள் பற்றி பேசும்போது என் உடல் நடுங்குகிறது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அவர்கள் எப்படி கேள்வி எழுப்பினார்கள் என்பது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால், சந்தேஷ்காளியில் என்ன நடக்கிறது?.
MNREGA நிதியை மத்திய அரசு நிறுத்தி வைக்கிறது என்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டுகள் குறித்து பேசிய நிர்மலா சீதாராமன், மாநிலத்தில் 25 லட்சம் போலி வேலை அட்டைதாரர்கள் இருப்பதாக கூறினார். அப்படியென்றால் நான் எப்படி இந்தப் பணத்தை விடுவிக்க முடியும்?. இது பொதுப் பணம், தனியார் சொத்து அல்ல.
மேற்கு வங்கத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் அரசு செயல்படுத்தவில்லை. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பிலான சுகாதாரப் பலன்களைப் பெறலாம். ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் அரசு அதைச் செயல்படுத்தவில்லை. வரி செலுத்துவோர் மாநில அரசால் மீண்டும் மீண்டும் வஞ்சிக்கப்படுவதாக கூறினார்.