தமிழகத்தில் பா.ஜ.கவுக்கு இன்றைய தினத்தில் 30 சதவீத வாக்கு உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழகத்தில் பா.ஜ.க. கால் ஊன்றமுடியாது என சிலர் சவால் விட்டார்கள். ஆனால், இன்று நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது. தமிழக மக்கள் பா.ஜ.கவை ஆதரிக்க ஆரம்பித்துவிட்டனர்.
என் மண், என் மக்கள் யாத்திரை மக்களிடையே புதிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொது மக்கள் அமோக ஆதரவு பா.ஜ.கவுக்குக் கிடைத்துவிட்டது. இதனால், 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோர் பாடுபட்டுள்ளனர். இதனால், அவர்களைப் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். தி.மு.கவைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் ஜெயிலில் இருக்கிறார். மற்றொருவர் ஜெயிலுக்கு செல்ல உள்ளார். மேலும், 11 அமைச்சர்கள் நீதிமன்ற விசாரணையில் உள்ளனர்.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 60 நாட்கள் உள்ளன. இந்த தேர்தல் வரலாற்றில் இடம் பெறப்போகும் தேர்தலாக அமையும் என அவர் தெரிவித்தார்.