காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக் சித்தாந்தத்தை முழுமையாக கொண்டுள்ளதாக
பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார்.
அப்போது, இன்று பாஜக நிறுவன நாள். பாஜக மக்களின் நம்பிக்கையை வென்றுள்ளது. பாஜக மக்களின் மனதை வென்றுள்ளது. இதற்கு மிகப்பெரிய காரணம் பாஜக அரசியலை பின்பற்றாமல் தேசிய கொள்கையை பின்பற்றுவதுதான். பாஜகவைப் பொறுத்தவரை, தேசமே முதன்மையானது. இது பாஜகவின் முழக்கம் அல்ல.எங்கள் நம்பிக்கை பிரகடனம் என தெரிவித்தார்.
எங்கள் கொள்கைகள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், இதற்காக நாங்கள் 10 ஆண்டுகள் உழைத்துள்ளோம் எனறும் அவர் கூறினார்.
தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என தெரிவித்த பிரதமர் மோடி, காங்கிரஸ் மற்றும் சமாஸ்வாதி கட்சிகள் வேட்பாளர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறுவதாகவும், சில இடங்களில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடாமல் பின் வாங்குவதாக கூறினார்.
10 ஆண்டுகளுக்கு முன்பு சஹரன்பூருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்தேன்.அப்போது நாடு நெருக்கடியான கால கட்டத்திலும் சென்று கொண்டிருந்தது.அப்போது நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என வாக்குறுதி அளித்தேன். அது தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இது மா சக்தியின் இடம். சக்தி வழிபாட்டை ஒருபோதும் புறக்கணிக்காத நாடு பாரதம். ஆனால் INDI கூட்டணி தலைவர்கள் சனாதன தர்மத்திற்கு எதிராக செயல்படுகின்றனர். சக்தியை அழிக்க முயன்ற அனைவருக்கும் என்ன நடந்தது என்பது வரலாறு என்றும் மோடி தெரிவித்தார்.
அயோத்தி ராமர் கோவில், பிரிவு 370 நீக்கம் உள்ளிட்ட அரசின் சாதனைகளையும் பிரதமர் மோடி விவரித்தார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக் சித்தாந்தத்தை முழுமையாக கொண்டுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.