அயோத்தி ராமர் கோயில் விழாவை புறக்கணித்ததன் மூலம் ராமரை காங்கிரஸ் அவமதித்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபட் மக்களவை தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது :
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படாமல் இருக்க காங்கிரஸ் பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், நாட்டு மக்கள் அளித்த நன்கொடையால் இவ்வளவு அழகான கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் பாவங்களை மன்னித்து ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவுக்கு வருமாறு அழைத்த போது காங்கிரஸ் தலைவர்கள் புறக்கணித்தார்கள்.
அதில் கலந்து கொண்ட சில தலைவர்களையும் வெளியேற்றினார்கள். நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் அவர்களின் பக்திக்கு ஏற்ப விழாவுக்கு பங்களித்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் ராமர் கோயில் கட்டுவதற்காக தனது வாழ்க்கையையும் அரசாங்கத்தையும் அர்ப்பணித்தார் என்றும் மோடி கூறினார்.
வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கை நோக்கி தனது அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும், ஆனால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக்கின் அறிக்கை போல் உள்ளதாகவும் மோடி சாடினார்.