திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வெவ்வேறு நிலைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் 3 பேர், குரூப் 1- தேர்வில் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வின் முடிவுகள் அண்மையில் வெளியாகின.
இதில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெவ்வேறு நிலைகளில் பணியாற்றும் மூன்று பெண் ஊழியர்கள், உதவி ஆட்சியர் உள்ளிட்ட பணிகளுக்குத் தேர்வாகியுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் சின்னசெட்டிபாளையத்தை சேர்ந்த சுபாஷினி என்பவர், திருப்பூர் கூட்டுறவுத் துறையில் முதுநிலை ஆய்வாளராக பணியாற்றி வரும் நிலையில் தற்போது குரூப் 1 தேர்வில் தமிழ்நாட்டிலேயே 49-ம் இடம் பிடித்து கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளராகத் தேர்வாகியுள்ளார்.
இதேபோல், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் நித்யா, குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று உதவி ஆட்சியராக பொறுப்பேற்க உள்ளார்.
இதே போல், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் இந்திரா பிரியதர்ஷினி, வணிக வரித்துறை உதவி ஆணையராக பொறுப்பேற்க உள்ளார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தகுதித் தேர்வில் தமிழகம் முழுவதும் 95 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், அதில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே 3 பேர் பணியாற்றுவது தங்களுக்கே ஆச்சர்யமளிப்பதாக மூவரும் வியப்படைந்துள்ளனர்.