கர்நாடகாவில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்பி பிரஜ்வால் ரேவண்ணாவை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து அக்கட்சியின் தலைவர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவை தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது.
அவர் பெண்களுடன் நெருக்கமாக இருப்பது போன்று 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இவ்விவகாரத்தில், பிரஜ்வால் ரேவண்ணா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.
இது தொடர்பாக, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் உயர்மட்டக் குழு பெங்களூருவில் கூடி ஆலோசித்தது.
இக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கட்சியின் தலைவர் குமாரசாமி,
சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை முடியும் வரை பிரஜ்வால் ரேவண்ணா கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், நாட்டை விட்டு தப்பி ஓடிய பிரஜ்வால் ரேவண்ணாவை உடனடியாகக் கைது செய்ய வேண்டுமெனவும், இவ்விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 3 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் கர்நாடக டிஜிபி அலோக் மோகனுக்கு, தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது