ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்
தஞ்சாவூரில் ஆன்லைன் ரம்மி விளையாடி லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளைஞர் தனசீலன் தற்கொலை செய்துகொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம், ரம்மி போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த நவம்பர் 10-ஆம் தேதி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு அங்கொன்றும், இங்கொன்றுமான நிகழ்ந்து வந்த தற்கொலைகள் தற்போது அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
கடந்த 15 நாட்களில், 5 பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படவில்லை என்றால் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவது தான் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை முடிவு கட்டுவதற்கான ஒரே தீர்வு எனவும் அவர் கூறியுள்ளார்.
தமிழக அரசு இனியாவது உறக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டு ஆன்லைன் சூதாட்டத்திற்கு உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்று தற்கொலைகளில் இருந்து மக்களைக் காக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.