மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களை காக்கும் மண் ஆணி திட்டம் தமிழக அரசுக்கு புகழ் சேர்க்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீலகிரி மாவட்டத்தில் ஏற்படும் நிலச்சரிவை தடுக்க புதிய தொழில்நுட்பமான மண் ஆணி திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஜியோ கிரிட் முறையில் மண்ணின் உறுதித் தன்மையை அதிகப்படுத்தி வலிமையூட்டும் முறையில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், நிலச்சரிவை தடுக்க தற்போது பயன்படுத்தப்படும் முறையை காட்டிலும் மண் ஆணி திட்டத்தில் செலவினம் பாதியாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூர்வாங்க ஆய்வு அடிப்படையில் கோடப்பமந்து, பாக்யா நகர் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை மூலம் மண் ஆணி திட்டம் செயல்படுத்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மண் ஆணி திட்டம் வெற்றிகரமாக அமைந்தால் கொடைக்கானல், கொல்லிமலை, வால்பாறை, ஏற்காடு ஆகிய மலைப்பகுதிகளில் விரிவுப்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.