இனம் தெரியாத அரிய வகை செவித் திறன் குறைபாட்டால் பாதிப்படைந்திருப்பதாக, பிரபல பின்னணிப் பாடகி அல்கா யாக்னிக் தெரிவித்துள்ளார். மேலும் ஹெட்போன்களைக் கவனமாகப் பயன்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
பிரபல பாலிவுட் பின்னணி பாடகியான அல்கா யாக்னிக், ஹிந்தி, தமிழ் உட்பட 25 மொழிகளில், சுமார் 9000 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி தனது இனிய குரலால் இசை இரசிகர்களை வசீகரபடுத்தி வந்தார்.
1980 மற்றும் 1990-களில் பிரபலமான ‘ஏக் தோ தீன்’, ‘சோலி கே பீச்சே கியாஹே’ உட்பட பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியிருக்கிறார்.
தமிழில், ஓரம்போ படத்தில் ‘இது என்ன மாயம்’, ‘வாய்மை’என்ற படத்தில் ‘ கண்படும் உன் முகம்’ ஆகிய பாடல்களை பாடியிருக்கிறார்.
இரண்டு தேசிய விருதுகளுடன் 7 முறை சிறந்த பாடகிக்கான பிலிம் பேர் விருது பெற்றுள்ள அல்கா யாக்னிக், அதிலும் 1999 முதல் 2001 வரை தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் சிறந்த பின்னணி பாடகிக்கான விருதைப் பெற்றுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் விமானப் பயணம் மேற்கொண்ட இவருக்குத் திடீரென செவித்திறன் பாதிப்படைந்துள்ளது. எந்தச் சத்தமும் கேட்க முடியாமல் போனது. இதனால் அச்சமடைந்த அல்கா யாக்னிக் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று வருகிறார். நீண்ட நாள்களாக யாருடனும் இது பற்றித் தெரிவிக்காத அல்கா, தற்போது இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இன்ஸ்டா பக்கத்தில், சமீபத்தில் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில்,நரம்புகளின் பாதிப்பினால், தனக்கு ஒரு அரிய வகை செவித் திறன் குறைபாடு இருப்பது கண்டறிய பட்டதாகவும், இது தனக்கு திடீர் பின்னடைவு என்றும் கூறியுள்ளார்.
அதிக சத்தம் கேட்கும் போதும், ஹெட்போன்களைப் பயன்படுத்தும்போதும், அதிக கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ள அல்கா யாக்னிக், எல்லோரும் தமக்காக பிரார்த்தனை செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரபல பின்னணி பாடகி அல்கா யாக்னிக்க்கு வந்திருக்கும் இந்த அரிய வகை செவித் திறன் குறைபாடு நோயானது, அதிகளவு சத்தத்தை கேட்பதாலும், நோய்த்தொற்று பாதிப்பாலும், தலையில் அடிபடுதலாலும் முதுமை காரணமாகவும் போன்றவற்றால் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.