நாளை கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில் ஆயிரம் டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் வாங்கி குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 39 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது பாதிக்கப்பட்டவர்கள் அண்ணாமலையிடம் கதறி அழுது தங்கள் துயரத்தை வெளிப்படுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசிய அண்ணாமலை, கள்ளச்சாராயம் விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை என்றும், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பாஜக சார்பில் தலா 1 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் கூறினார்.
மேலும், கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களுடன், திமுகவினர் நெருக்கமாக உள்ளதாக குற்றம்சாட்டிய அவர், கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பொறுப்பேற்று மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நாளை கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில் ஆயிரம் டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட வேண்டும் எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.