டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பரிக்கா அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அதன் படி, குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தனது எக்ஸ் பக்கத்தில், தெரிவித்த வாழ்த்துக்குறிப்பில் “டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும், சாகாத மனநிலையுடன் கடினமான சூழ்நிலையில், பயணம் செய்த அணி, போட்டி முழுவதும் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியது. இறுதி போட்டியில் இது ஒரு அசாதாரண வெற்றியாகும். இந்திய அணியால் பெருமை அடைகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணியின் அபார வெற்றிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தங்கள் அணி டி20 உலகக் கோப்பையை ஸ்டைலாக வீட்டிற்கு கொண்டு வருகிறது எனவும், இந்திய கிரிக்கெட் அணிக்காக தாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த போட்டி வரலாற்று சிறப்புமிக்கது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில் T20 உலகக் கோப்பையை முழுமையான ஆதிக்கத்துடன் வென்றதற்காக கொண்டாடுவதில் மகிழ்ச்சியடைவதாக பதிவிட்டுள்ளார். மேலும் நமது இந்திய அணி சவாலான சூழ்நிலைகளில் இணையற்ற திறமையை வெளிபடுத்தி சாதனையை முறியடித்தற்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதாக அவர் பதிவிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்திய அணிக்காக தெரிவித்த வாழ்த்து செய்தியில், டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றது, நம் தேசத்திற்கு ஒரு பெருமையான தருணம் என தெரிவித்திருந்தார். மேலும் வீரர்களின் ஈடு இணையற்ற குழு உணர்வு மற்றும் விளையாட்டுத் திறமையால் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியதற்கு வாழ்த்துக்கள் எனவும், இந்த வரலாற்று சாதனையால தேசம் பெருமிதம் கொள்வதாகவும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, மத்திய அமைச்சர் எல்.முருகன் இந்திய அணியினருக்கு தெரிவித்த வாழ்த்து செய்தியில் டி20 உலகக்கோப்பையை கைப்பற்றிய இந்திய அணியினர் மேலும், சிறப்பான பயணத்தை மேற்கொள்ள வாழ்த்துக்கள் எனவும் வீரர்களின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது என அமைச்சர் எல்.முருகன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.