மத்திய கப்பல்துறை அமைச்சகம் ஜூலை 16ஆம் தேதி மாநிலங்களின் கடல்சார், நீர்வழிப் போக்குவரத்துக் குழுக்களின் கூட்டத்தை நடத்துகிறது.
மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் நீர்வழிகள் அமைச்சகம் மாநிலங்களின் கடல்சார், நீர்வழிப் போக்குவரத்துக் குழுக்களின் கூட்டத்தை 4 ஜூலை 16 ஆம் தேதி காணொலி மூலம் நடத்தவுள்ளது. மத்திய கப்பல் துறை செயலாளர் டி. கே. ராமச்சந்திரன் இக்கூட்டத்திற்குத் தலைமை வகிக்க உள்ளார்.
இந்தியா முழுவதும் கடல்சார் போக்குவரத்திலும் பிற நீர்வழிப் போக்குவரத்திலும் விரிவான வளர்ச்சியை உறுதி செய்வதை இந்தக் குழு நோக்கமாகக் கொண்டுள்ளது. மாநிலங்கள் சார்ந்த கடல்சார், நீர்வழிப் போக்குவரத்துத் திட்டங்களைத் தயாரித்தல், கடல்சார் கொள்கைகளை உருவாக்குதல், பசுமை முன்முயற்சிகள், நீர்வழித்தடங்கள் மேம்பாடு, கப்பல் சுற்றுலா, நகர்ப்புற நீர்வழிப் போக்குவரத்து, கலங்கரை விளக்கங்கள் மேம்பாடு ஆகியவை தொடர்பாக இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படும்.
ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள மாநில குழுக்களின் பணிகளில் உள்ள முன்னேற்றம், சாகர்மாலா திட்டத்தை செயல்படுத்துவது, சரக்குப் போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டம், கடலோர, ஆற்றுக் கப்பல் சுற்றுலா தொடர்பாக மாநிலங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்டவை குறித்தும் இக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும்.
நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை என்பதை உணர்ந்து, மத்திய கப்பல் துறை அமைச்சகம் ஒவ்வொரு மாநிலத்திலும், மாநில கடல்சார், நீர்வழிப் போக்குவரத்துக் குழுவை நிறுவியுள்ளது. கடல்சார் துறைகளிலும் நீர்வழிப் போக்குவரத்துத் துறையிலும் பல்வேறு முன்முயற்சிகளை ஒருங்கிணைப்பதில் இந்தக் குழுக்கள் முக்கிய கவனம் செலுத்துகின்றன.
ஒவ்வொரு மாநில குழுவும் மாநில தலைமைச் செயலாளர் அல்லது கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் செயல்படுகிறது. பெரிய துறைமுகங்கள், கடல்சார் வாரியங்கள், மாநில பொதுப்பணித்துறை, சுற்றுலாத் துறை, மீன்வளத் துறை, ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சுங்கத் துறை ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக இந்தக் குழுக்கள் உள்ளன.
தற்போது, ஆந்திரா, மிசோரம், ஹிமாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, புதுச்சேரி, ராஜஸ்தான், பீகார், அசாம், கோவா, கேரளா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் லட்சத்தீவு யூனியன் பிரதேசத்திலும் இந்தக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 30 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்தக் குழுக்கள் விரைவில் அமைக்கப்படவுள்ளன.