பழனி மலை கோயில் அருகே ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கோயில் நிர்வாகம் முயன்றபோது இளைஞர் ஒருவர் திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை அடிவார பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டு, வாகனங்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக பழனி மலை கோயில் படிகளின் பாதையில் உள்ள சில கடைகளை அகற்றும் பணி நடைபெற்று வந்தது. அதன்படி தங்கம்மாள் என்பவரின் கடைகளை அகற்ற கோயில் நிர்வாகம் முயன்றபோது இரு தரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது தங்கம்மாளின் பேரன் வசந்த், திடீரென மலைக்கோவில் மண்டபத்தின் மீது ஏறி, தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வசந்த்தை பாதுகாப்பாக கீழே அழைத்து வந்தனர். அதனைத்தொடர்ந்து இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்திய பின் கடைகளுக்கு தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டது.