மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜெ.பி.நட்டா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டதையடுத்து, புதிய ஓய்வூதிய திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மத்திய அரசு ஊழியர் ஒருவர், ஓய்வு பெறுவதற்கு முன் 12 மாதங்களில் எடுக்கப்பட்ட சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களின் பங்களிப்பு 10 சதவீதமும், மத்திய அரசின் பங்களிப்பு 14 சதவீதமுமாக இருக்கும் நிலையில் புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி மத்திய அரசின் பங்களிப்பு 18 சதவீதமாக உயர்த்தப்படும் எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி சுமார் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.