காங்கிரஸ் ஆட்சியின்போது பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டை விட பிரதமர் மோடியின் ஆட்சியில் பெண்களுக்காக பல கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அதிகாரம் , அரசியல் என எல்லாவற்றிலும் உயர்ந்து வரும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற மகளிருக்கான கருத்தரங்கம் தனியார் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அடிமட்ட உழைப்பாளிகளுக்காக பிரதமர் மோடி திட்டங்களை தீட்டி வருகிறார்.
உலக நாடுகளில் முன்னேற்றத்தை நோக்கி நகர்த்துக் கொண்டிருக்கக்கூடிய நாடாக இந்தியா விளங்கி வருகிறது. 2047 இல் இந்தியா மைல்கல் சாதனையை படைக்க உள்ளது.
அடுத்த தலைமுறையினரின் முன்னேற்றத்தை நோக்கி இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறது. அதிலும் முக்கியமாக பெண்களின் வளர்ச்சியிலும் பெண்களின் முன்னேற்றத்திலும் மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது.
இந்தியாவின் ஜி 20 மாநாட்டில் உலகின் முக்கிய 20 நாடுகள் கலந்து கொண்டன.
இந்தியாவில் டிஜிட்டல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் டிஜிட்டல் மயம் பெரிய அளவில் உறுதுணையாக இருந்துள்ளது.
மத்திய அரசை பெண்களுக்கு எல்லா வகையிலும் உதவிகளை செய்து வருகிறது. கிராமப்புறம், நகர்ப்புறம், படித்தவர், படிக்காதவர் என எந்த பாகுபாடும் இன்றி மத்திய அரசு பெண்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.
நாம், நமது மகன்கள், நமது பேரன்கள் என நமது அடுத்த தலைமுறையினர் அனைவரும் வளர்ச்சியடைந்த சிறப்பான இந்தியாவை 2047-இல் காண்பார்கள்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் தமிழகத்தில் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டது.
தொட்டில் குழந்தை திட்டம் போன்ற பல சிறப்பான திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தவர், பெண்களுக்கு எதிரான பல தடைகளை நீக்கி பெண்கள் முன்னேற சிறப்பாக செயல்பட்டவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என தெரிவித்தார்.
தற்போது இந்தியாவில் 100 க்கும் மேற்பட்ட பெண் நீதிபதிகள் இந்தியா முழுவதும் நீதியரசர்களாக உள்ளார்கள். இந்தியாவில் முக்கிய துறைகளில் பெண்கள் முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார்கள். 2013 இல் 5.87 சதவீதமாக இருந்த பெண் காவலர்கள் எண்ணிக்கை 2022 இல் 11.75 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பெண்களுக்கு தேவையான திட்டங்களை ஆராய்ந்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கு எல்லா இடங்களிலும் எல்லா உரிமையையும் வழங்க மத்திய அரசு தொடர்ந்து போராடி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பெண்கள் கல்வியிலும் முன்னேறியுள்ளார்கள்.
பிரதமராக மோடி பதவி ஏற்ற 10 ஆண்டுகளில் பெண்களின் முன்னேற்றத்திற்கு பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தியுள்ளார். இந்தியாவில் உள்ள 53 கோடி வங்கி கணக்குகளில் 55 சதவீதம் பெண்களின் வங்கி கணக்குகளாக இருக்கிறது என தெரிவித்தார்
கடந்த 10 ஆண்டுகளில் பெண் தொழில்முனைவோரின் எண்ணிக்கை சரளமாக உயர்ந்துள்ளது.பெண்களின் முன்னேற்றதால் இந்தியாவும் பல இடங்களில் முன்னேறியுள்ளது.10 ஆண்டுகளில் 311 தொழில் நகரங்கள் பெண்களுக்காகவே இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது.
மோடி அரசு பதவி ஏற்ற பின் பெண்களை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்கவில்லை. பெண்கள் முதலாளிகளாக இருப்பதால் மட்டும் இந்தியாவில் பெண்கள் முன்னேறவில்லை, சிறிய கிராமத்தில் பல புது புது செயல்பாடுகளில் பெண்கள் ஈடுபட்டுள்ளதாலும் இந்தியாவில் பெண்கள் முன்னேறி உள்ளார்கள்.
இந்தியாவில் ஒவ்வொரு பெண்களும் சக்தி வாய்ந்த பெண்களாக உள்ளார்கள். காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு ஒதுக்கிய பட்ஜெட்டை விட பிரதமர் மோடியின் ஆட்சியில் பெண்களுக்கு பட்ஜெட்டில் பல கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 2024 மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்காக 3.10 லட்சம் கோடி என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.