தூத்துக்குடி துறைமுகத்தில் கட்டப்பட்ட சர்வதேச சரக்குப் பெட்டக முனையத்தை பிரதமர் மோடி குஜராத்தில் இருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், வளர்ச்சியடைந்த பாரத திட்டத்தில், இந்த சர்வதேச சரக்குப் பெட்டக முனையம் முக்கிய பங்கு வகிப்பதாகவும், நாட்டின் கடல்சார் உள்கட்டமைப்பில் தூத்துக்குடி சர்வதேச சரக்குப் பெட்டக முனையம் புதிய நட்சத்திரமாக ஜொலிக்கும் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தின் துறைமுக செயல்பாடுகளை விவரித்த அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவை முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்டார்.
தமிழகத்தில் 3 பெரிய துறைமுகங்களும், 17 சிறிய துறைமுகங்களும் இருப்பதாக கூறிய பிரதமர் மோடி, இதன்மூலம் கடல்சார் வர்த்தகத்தில் தமிழகம் பிரதான மையமாக விளங்குவதாக தெரிவித்தார்.
நாட்டில் துறைமுக பொறுப்புக் கழக வளர்சிக்காக 7,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும், புதிதாக திறக்கப்பட்ட தூத்துக்குடி சரக்குப் பெட்டக முனையத்தில் 40 சதவீதம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்றும் மோடி கூறினார்.