ஜம்மு- காஷ்மீர் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு ரத்தக்கரையுடன் இருந்த சமயத்தில், ராகுல் காந்தி கோடை விடுமுறையைக் கழிக்க லண்டன் சென்றதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டினார்.
ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, வரும் 18-ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, கிஷ்ட்வார் பகுதியில் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு- காஷ்மீரில் காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி பயங்கரவாதத்தை ஊட்டி வளர்த்ததாக விமர்சித்தார்.
பயங்கரவாதத்தால் காஷ்மீரில் ரத்தம் வழிந்தோடியபோது ராகுல் காந்தி கோடை விடுமுறைக்காக லண்டன் சென்றதாகவும் அமித் ஷா குற்றம்சாட்டினார். ஜவஹர்லால் நேருவும், ஃபரூக் அப்துல்லாவும் காஷ்மீர் பண்டிட்களை புறக்கணித்து பயங்கரவாதத்தை பரப்பியதாக கூறிய அவர், அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370-ஐ ஒருபோதும் அமல்படுத்த முடியாது என சூளுரைத்தார்.