நடிகை சமந்தா விவாகரத்து விவகாரம் தொடர்பாக தெலங்கானா அமைச்சர் கோண்டா சுரேகா தெரிவித்த கருத்துக்கு நடிகர் நாகர்ஜூனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தா, சில காரணங்களால் விவாகரத்து பெற்று பிரிந்தார். கருத்து வேறுபாடால் பிரிவதாக அறிவித்தாலும், சரியான காரணத்தை இருவரும் வெளிப்படையாக கூறாத நிலையில், சமந்தா-நாக சைதன்யா விவகாரத்து தொடர்பாக தெலங்கான அமைச்சர் கோண்டா சுரேகா சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார்.
இருவரின் விவகாரத்துக்கு தெலங்கானாவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகன் கே.டி.ராமாராவ் தான் காரணம் என்றும், கே.டி.ராமாராவ் செய்த விஷயங்களால் பல நடிகைகள் திருமணம் செய்து கொண்டு தெலுங்கு சினிமாவை விட்டே போய்விட்டார்கள் எனவும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
தெலங்கானா அமைச்சர் சுரேகாவின் கருத்துக்கு நடிகர் நாகர்ஜூனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் திரை நட்சத்திரங்களின் வாழ்க்கையை யாரும் விமர்சிக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார். பொறுப்பான பதவியில் பெண்ணாக இருக்கும் அமைச்சர், தங்கள் குடும்பத்திற்கு எதிராக தெரிவித்துள்ள கருத்துகள் அனைத்தும் பொருத்தமற்றவை, தவறானவை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து தொடர்பாக அமைச்சர் கோண்டா சுரேகா தெரிவித்துள்ள கருத்துகளை உடனடியாக அவர் திரும்ப பெற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். அமைச்சர் சுரேகாவின் கருத்துக்கு நடிகை சமந்தா மற்றும் நடிகர் நானி உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரும், நடிகருமான நாக சைதன்யா வெளியிட்டுள்ள பதிவில், விவகாரத்து தொடர்பாக பல்வேறு ஆதரமற்ற கிசுகிசுகள் வந்தபோதும் தமது குடும்பத்திற்காகவும், முன்னாள் மனைவியின் மீதான மரியாதை காரணமாக இதுவரை அமைதியாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போது விவகாரத்து தொடர்பாக தெலங்கானா அமைச்சர் சுரேகா தெரிவித்துள்ள கருத்து முற்றிலும் பொய்யானது, கேலிக்கூத்தானது என தெரிவித்துள்ளார். பெண்களின் ஆதரவு கொண்ட அமைச்சர், பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகளை ஊடகங்களின் தலைப்புச் செய்திகளுக்காக பயன்படுத்திக் கொள்வது வெட்கக்கேடானது என அவர் கூறியுள்ளார்.