தனக்கு எதிராக நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நடிகர் சிங்கமுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
யூடியூப் சேனல் ஒன்றில் தன்னைப் பற்றி சிங்கமுத்து அவதூறு பேசியதாகவும், அதற்காக அவர் 5 கோடி ரூபாயை மானநஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்றும், உயர் நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிங்கமுத்து தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உள்நோக்கத்துடன் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை எனவும், தனது சொந்த அனுபவத்தை மட்டுமே கூறியதாக சிங்கமுத்து தெரிவித்துள்ளார்.
மேலும், வருத்தம் தெரிவித்த போதும் கூட, தன்னை துன்புறுத்தும் நோக்கில் வடிவேலு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார் எனவும், எனவே, இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 24 -ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.