ஜிஎஸ்டி, நீட் தேர்வுக்கு எல்லாம் மாநில உரிமை பேசும் திமுக அரசு, பூரண மதுவிலக்கை அமல்படுத்த மத்திய அரசை கைகாட்டுவது ஏன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
ம.பொ.சிவஞானத்தின் 29 வது நினைவு நாளையொட்டி சென்னை தி.நகரில் உள்ள உருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறியதாவது : பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி பகிர்வை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை சரியானதுதான்.
மதுக்கடைகளை முதலில் திறந்தது யார்.?தமிழக அரசு தானே. மாநில உரிமைகள் பேசும் திமுக, பூரண மதுவிலக்கை அமல்படுத்த சொன்னால் மட்டும் ஏன் மத்திய அரசை கைக்காட்டுகிறீர்கள்?
குஜராத் மாநில அரசு 50,000 கோடிக்கு பால் விற்பனை செய்யும்போது , தமிழகம் 54,000 கோடிக்கு மது விற்பனை செய்கிறது. சாதிவாரி இட ஒதுக்கீடு கொடுக்க முடியும் என்றால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உங்களுக்கு உரிமை இல்லையா? மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளச்சாராயம் வந்து விடும் என்று சொல்வதற்கு இவ்வளவு கட்டமைப்பு, காவல்துறை அதிகாரம் தேவையா?
நமக்கு நாமே நடைபயணத்தின் போது தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த காந்தி ஜெயந்திக்கு டாஸ்மாக்கை மூடுவோம் என்று கூறினார்.அவர் கூறி எத்தனை காந்தி ஜெயந்தி கடந்து விட்டது.
அமைச்சரவை மாற்றத்தை நான் பெரிதளவில் ஏற்றுக் கொள்ளவில்லை, தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில் பட்டியலினத்தை சார்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ளனர்.. அமைச்சர் ராஜ கண்ணப்பனை மூன்று முறை துறை மாற்றம் செய்துள்ளனர்.ஒரு துறையின் மீது முழுமையாக எப்படி கவனம் செலுத்த முடியும். கருணாநிதியின் பேரன்,ஸ்டாலின் மகன் என்ற தகுதியை தாண்டி துணை முதலமைச்சராக உதயநிதிக்கு என்ன தகுதி உள்ளது” என சீமான் கேள்வி எழுப்பினார்.