சர்வதேச அளவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுப்பதை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் விரும்பவில்லை என கூறப்படுகிறது. அதன் காரணமாகவே, இந்தியாவில் உள்நாட்டுக் குழப்பத்தை ஏற்படுத்தவும், இந்திய அரசின் மீது அழுத்தத்தைக் கொடுக்கவும், காலிஸ்தான் தீவிரவாதிகளை மறைமுகமாக ஆதரிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா, தனது அனைத்து சர்வதேச உறவுகளிலும், தனது சொந்த நலன்களையே முதன்மைப்படுத்துகிறது. எப்போதுமே தன் வெளியுறவு கொள்கைகளைத் தமது நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நலன்களின் அடிப்படையில் அமெரிக்கா தீர்மானிக்கிறது.
வெளிநாடுகளில் அமெரிக்க பெருநிறுவன நலன்களுக்கு ஏற்ற சூழலை உறுதி செய்வதில் அமெரிக்கா குறியாக இருக்கும். ஒரு நாட்டின் ஜனநாயக அரசால், அமெரிக்க நிறுவனங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் ஏற்படும் போது , அமெரிக்கா அந்நாட்டில் ஜனநாயகத்துக்கு எதிராக போர் தொடுக்கிறது.
அமெரிக்கா ஒரு நாட்டின் மீது போர் நடத்தும் முறை வித்தியாசமானது. உலகம் முழுவதும் உள்ள தீவிரவாத மற்றும் தனி ராணுவ அமைப்புகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்துள்ளது. மக்களாட்சி நடந்த நாடுகளில், அடக்குமுறையால் ஆட்சியைக் கைப்பற்றிய எண்ணற்ற சர்வாதிகார ஆட்சிகளுக்கும் அமெரிக்கா பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளது.
முதலில் குறிப்பிட்ட நாட்டில், அரசுக்கு எதிரான தீவிரவாத குழுக்களை உருவாக்குகிறது. அந்த தீவிரவாத குழுக்களுக்கு மறைமுகமாக CIA மூலம் நிதியுதவி செய்கிறது. கூடுதலாக, தீவிரவாத குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கிறது. தீவிரவாத குழுக்களின் வருமானத்துக்காக, பெரும்பாலும் போதைப்பொருள் வர்த்தகத்தை நடத்த அமெரிக்கா உதவுகிறது. மேலும் அதிநவீன ஆயுதங்களைக் கொள்முதல் செய்யவும் துணை செய்கிறது.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்கா இதே வகையில் தான் செயல்பட்டு வருகிறது. இந்த அடிப்படையில்தான், அரசியல் காரணங்களுக்காக மத்திய கிழக்கில் அல்-கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாத அமைப்புகளை அமெரிக்கா உருவாக்கி, பயிற்சி அளித்து, நிதியுதவி செய்து வந்தது.
ரஷ்யாவுடன் உறவுகளை மீண்டும் கட்டியெழுப்புவதில் எத்தியோப்பியா செயல்பட்டு வருவதால், அமெரிக்கா எத்தியோப்பியாவை சீர்குலைக்க முயல்கிறது. சீனாவுக்கு எதிராக ஹாங்காங்கில் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா உதவுகிறது. லிபியாவில் கடாபியை வீழ்த்துவதற்கு அல் கொய்தாவுடன் அமெரிக்கா கூட்டு சேர்ந்தது. சிரியாவில் பஷர் அசாத்தின் ஆட்சியை எதிர்க்கும் குர்திஷ் ஒய்பிஜிக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருகிறது.
செர்பியாவில் உள்ள கொசோவோ தொடங்கி மத்திய கிழக்கு நாடுகளில் உட்பட ஆசியாவில் வங்கதேசம் மற்றும் உக்ரைன் போன்ற நாடுகளிலும் உள்நாட்டு அரசியலில் அமெரிக்கா தலையிட்டு வருகிறது.
இதே வகையில் தான், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் இந்தியாவால் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதிகள் சுதந்திரமாக செயல் படுகின்றனர். அந்நாடுகளும், காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக உள்ளன.
இதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் உள்நாட்டு கலவரத்தைத் தூண்டவும், இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகளை அந்நாடுகள் ஊக்குவிக்கின்றன.
கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி நிஜ்ஜார் படுகொலை சம்பவத்தில் இந்தியாவுக்கு தொடர்பு என கனடா பிரதமர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவதும், இந்தியாவில் காலிஸ்தான் தனிநாடு கோரிக்கைக்குக் கனடாவில் பொதுவாக்கெடுப்பு நடத்தியதும், இந்தியாவால் தேடப் படும் காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதும், அவர்களுக்கு அரசு பாதுகாப்புத் துறையில் அரசு வேலை அளிப்பதும், கனடாவில் இந்துக்கள் மற்றும் இந்து கோயில்கள் மீதான காலிஸ்தான் தீவிரவாதிகளின் வன்முறைக்கு உதவுவதும் என்றும், கனடா அரசு இந்தியாவுக்கு எதிரான நிலைப் பாட்டை எடுத்துள்ளது.
கனடாவில் வரும் தேர்தலில் வெற்றி பெற, சீக்கியர்களின் ஆதரவைப் பெறும் நோக்கத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ காலிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கிறார் என்பது உண்மை என்றாலும் அதன் விளைவுகள் ஆபத்தானதாக உள்ளது.
காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன் உடனான கனடா மற்றும் அமெரிக்காவின் உறவு, இன்னமும் அந்நாடுகள் தீவிரவாதிகளையே சுய லாபத்துக்கு பயன்படுத்துவதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
சர்வதேச அரங்கில், வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்க, காலிஸ்தான் தீவிரவாதிகளை மேற்குலக நாடுகள் ஆதரிக்கின்றன என்று புவிசார் அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
இந்த சூழலில், இந்தியாவின் உள்விவகாரங்களில் அந்நிய தலையீட்டைத் தடுத்து, தனது இறையாண்மையை உறுதிப்படுத்த வேண்டிய நேரத்தில் இந்தியா உள்ளது.
கனடாவை, தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் அரசு என்று முத்திரை குத்திய இந்தியா, இந்தியர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் தீவிரவாதிகளுக்கு, உலகின் எந்த நாடும் உடந்தையாக இருப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது என்பதையும் ஆணித்தரமாக சொல்லி வருகிறது.
இந்நிலையில் தெற்கில் உள்ள நாடுகளை ஒன்றிணைத்து, அவர்களின்
முன்னுரிமைகள் மற்றும் வெவ்வேறு பிரச்னைகள் தொடர்பாக ஒரு பொதுவான
தளத்தை உருவாக்கவும், பிரதமர் மோடி குளோபல் சவுத் என்ற அமைப்பை முன்னெடுத்திருக்கிறார். புவி சார் அரசியலில் இந்தியா ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத் தக்கது.