உலகின் ஐந்தாவது பெரிய நாடாக பொருளாதாரத்தில் இந்தியா வளர்ந்து வருவதாகவும், வல்லமை மிக்க நாடாக இந்தியாவை பிரதமர் மோடி வளர்த்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 33ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார். விழாவில், நடிகர் அர்ஜுன் மற்றும் திரைப்பட இயக்குநர் பி.வாசு ஆகியோருக்கு கவுரவ முனைவர் பட்டம், விஞ்ஞானி சீனிவாச மூர்த்திக்கு கவுரவ அறிவியல் முனைவர் பட்டத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் வழங்கினார்.
இதனை தொடர்ந்து கவுரவ முனைவர் பட்டம் பெற்ற இயக்குநர் பி. வாசு, சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று நாடு முழுவதும் பெருமையுடன் இருக்கக்கூடிய மத்திய அமைச்சர் எல்.முருகன் கையில் இருந்து விருது வாங்கியது பெருமையாக உள்ளதாக கூறினார். எம்ஜிஆர், சிவாஜி என அனைவருக்கும் ஒப்பனை செய்த தன் தந்தையால்தான், தான் இந்த இடத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பெருமை மிகுந்த எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திடம் இருந்து முனைவர் பட்டம் பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் அர்ஜுன் தெரிவித்தார். திரை உலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதாகவும், திரைத்துறை நிஜ வாழ்க்கையில் அதிக பாடங்களை தனக்கு கற்பித்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், தோல்விக்கு அஞ்ச வேண்டாம் என்றும், ஒவ்வொரு தோல்வியும் பெரிய வெற்றிக்கான முதற்படி எனவும் நடிகர் அர்ஜூன் அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், 2047இல் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும் என்கிற டாக்டர் அப்துல் கலாம் கனவை நிறைவேற்ற பாடுபடுவதாக கூறினார். சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளை கடந்து நூறாவது சுதந்திர தினத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது இந்தியா வல்லரசாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இறுதியாக, டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் படித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி மத்திய அமைச்சர் எல். முருகன் கவுரவித்தார்.