காரைக்காலில் 8 மணி நேரமாக வெளுத்து வாங்கிய கனமழையால், சாலைகளில் ஆறுபோல் வெள்ளம் பெருக்கெடுத்து வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்தனர்.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் அதிகாலை முதல் சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.
குறிப்பாக நெடுங்காடு, கோட்டுச்சேரி, திருநள்ளாறு, திருப்பட்டினம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இருள் சூழ்ந்து குளிர் காற்றுடன் கனமழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
காமராஜர் சாலை, பள்ளிவாசல் சாலை, எம் எம் ஜி சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் மழைநீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியதால் மக்கள் வாகனங்களை இயக்க முடியாமல் திணறினர். தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் சிரமத்திற்குள்ளாகினர். தொடர் மழை காரணமாக கடலுக்கு செல்லாத மீனவர்கள், துறைமுகத்தில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர் .