மகாராஷ்டிராவில் மகாயுதி கூட்டணி அரசு மீண்டும் ஆட்சியமைக்க பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அம்மாநில காபந்து முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உறுதியளித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றிய போதிலும் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்தது. இந்த நிலையில் வரும் 5-ஆம் தேதி மகாராஷ்டிரா முதலமைச்சர் பதவியேற்பு விழா நடைபெறும் என பாஜக மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே தெரிவித்திருந்தார்.
பரபரப்பான இந்தச் சூழலில், சதாராவில் செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிரா மாநில காபந்து முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, பாஜக தலைமைக்கு தாம் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாகவும், அவர்களது முடிவுக்கு உடன்படுவதாகவும் தெரிவித்தார்.
கடந்த இரண்டரை ஆண்டு கால மகாயுதி கூட்டணி அரசை வரலாற்றில் பொன் எழுத்துகளால் பதிவு செய்ய வேண்டுமென கூறிய அவர், இதனால்தான் மீண்டும் தாங்கள் ஆட்சியமைக்க மக்கள் வாய்ப்பு வழங்கியதாகவும் குறிப்பிட்டார். அத்துடன், அடுத்த மகாராஷ்டிரா முதலமைச்சர் நாளை தேர்வு செய்யப்படுவார் என்றும் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.