சென்னை கொளத்தூர் தொகுதியில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. தொடர் கனமழையால் சென்னையின் பல பகுதிகளும் வெள்ளக் காடாய் காட்சியளித்தன. சாலைகளில் மழைநீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மேலும், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். இந்த நிலையில், சென்னை கொளத்தூர் தொகுதியில் கனமழை பாதிப்புகள் குறித்தும், நிவாரண பணிகள் தொடர்பாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களை சந்தித்து அவர் குறைகளை கேட்டறிந்தார்.
இதனை தொடர்ந்து சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை என்றும், சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், அம்மா உணவகங்கள் மூலம் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு இலவச உணவு வழங்கப்படுவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.