சபரிமலையில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தேவசம் போர்டுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையையொட்டி நவம்பர் 15-ஆம் தேதி நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஃபெஞ்சல் புயல் காரணமாக சபரிமலையில் பலத்த மழை பெய்ததுடன் பம்பை உள்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு பம்பை ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டு பின்னர் மழை குறைந்ததால் அந்த தடையானது நீக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து சபரிமலைக்கு வருகைதரும் பக்தர்கள் பாதுகாப்புடன் இருக்கவும், இரவு நேரங்களில் மலை ஏறுவதை தவிர்க்கவும் தேவசம்போர்டு அறிவுறுத்தல் வழங்கியது.
இந்நிலையில், சபரிமலையில் மழை பெய்து வருவதால் பக்தர்களின் பாதுகாப்பை தேவசம் போர்டு உறுதி செய்ய வேண்டுமெனவும், கட்டுப்பாடுகள் குறித்து பத்திரிகைகள் மூலம் தகவல் தெரிவிக்க நடவடிக்க எடுக்க வேண்டுமெனவும் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.