தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி விவரங்கள் கேட்டறிந்தார்.
ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து வெள்ள பாதிப்புகளை சீரமைக்க மத்திய அரசு 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்ட பிரதமர் மோடி, புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்துகிறது. வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தை கணக்கிட 3 மத்திய குழுக்களை தமிழ்நாட்டிற்கு அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பாதுகாப்பு, உள்துறை, பேரிடர் மீட்பு ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகள் இந்த மத்திய குழுக்களில் இடம்பெறவுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் அவர்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.