சபரிமலை ஐயப்பன் கோயிலில் இதுவரை 27 லட்சம் பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டுள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
வருடாந்திர மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டு வந்த நிலையில், இதுவரை 27 லட்சம் பேர் தரிசனம் மேற்கொண்டுள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
வரும் 26-ம் தேதி சபரிமலையில் மண்டல பூஜை நடைபெறும் என்றும், மண்டல பூஜையையொட்டி பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உணவகங்களில் அதிக எண்ணிக்கையில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்படுவதை தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பக்தர்களுக்கான கூட்டரங்கில் அதிகம் பேர் தங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர். மேலும், மகரவிளக்கு பூஜைக்காக கோயில் நடை டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என அதிகாரிகள் குறிப்பிட்டனர்.