மத்திய அரசு பாரபட்சமின்றி அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான திட்டங்களை பட்ஜெட்டில் அறிவித்துள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லியில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பாஜக பெற்றுள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் இங்கிலாந்தை பின்தள்ளி வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள் வரிசையில் இந்தியா 5வது நாடாக உள்ளது என்றும் கூறினார்.
அடுத்த 25 ஆண்டு வளர்ச்சிக்கான மிகச்சிறந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பட்ஜெட்டில் புதுச்சேரியிக்கு 3432 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ப்மர் மருத்துவமனைக்கு தனியாக 1450 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் 186 கோடி புதுச்சேரியின் குடிநீர் தேவைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், புதுச்சேரி, காரைக்கால், மாஹே ரயில்வே நிலையங்களை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
புதுச்சேரிக்கு எந்த ஒரு நிதி நெருக்கடியும் இல்லை எனவும் தேவையான நிதியை மத்திய அரசு வழங்க வருவதாகவும், மேலும் கூடுதல் நிதி தேவை என்றாலும் மத்திய அரசு வழங்கும் என்றும் எல்.முருகன் தெரிவித்தார்.
மத்திய பட்ஜெட்டில் அனைத்து மாநிலங்களுக்கும் பாராபட்சமின்றி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மொத்தத்தில் நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களின் தேவைக்கும் ஏற்ற பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் உள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள புதுச்சேரி தவில் கலைஞர் தட்சணாமூர்த்திக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், புதுச்சேரி பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.