முதலமைச்சரும், தவெக தலைவர் விஜயும், ஏசி ரூமில் அமர்ந்து கொண்டே அரசியல் செய்வதாகவும், மக்களோடு மக்களாக வந்து அவர்களுடைய குறைகளை கேட்க யாரும் தயாராக இல்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
பழனி முருகன் கோயிலில் அண்ணாமலை தரிசனம் செய்தார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ஒரு மண்டல காலம், 48 நாட்கள் விரதம் இருந்து, தைப்பூச தினத்தன்று, அப்பன் முருகப் பெருமானை,பழனி மலையில் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்ததை பெரும் பேறாகக் கருதுகிறேன். குன்றெல்லாம் குமரனுக்கே. கந்தனுக்கு அரோகரா என தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலின்போது பல்வேறு வாக்குறுதிகள் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் இதுவரை எதுவும் நிறைவேற்றவில்லை என தெரிவித்தார்.
மக்களுக்கு அல்வா எப்படி கொடுப்பது? என்று தெரிந்து கொள்ளவே முதலமைச்சர் அல்வா கடைக்கு சென்றவதாகவும் அண்ணாமலை சாடினார்.
“முதலமைச்சர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் ஆகியோர் ஏசி ரூமில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்வதாகவும், மக்களோடு மக்களாக வந்து அவர்களுடைய குறைகளை கேட்க யாரும் தயாராக இல்லை என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
இதுபோன்று தைப்பூச விழாக்களில் பங்கேற்று பொதுமக்களின் குறைகளை கண்டறிய வேண்டும் என்றும், அமைச்சர் சேகர் பாபு கடந்த 3 ஆண்டுகாலமாக தேய்ந்த ரெக்கார்டு போல பேசி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
சபரிமலையிலும், திருச்சி ஸ்ரீரங்கத்திலும் மக்களை காக்க வைத்து சாமி அமைச்சர் சேகர்பாபு தரிசனம் செய்ததை சுட்டிக்காட்டிய அண்ணாமலை, முதலமைச்சர் துணைவியாருக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை சாமானிய மக்களுக்கும் கொடுக்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்தார்.
பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
பிரான்ஸ் நாட்டில் இருந்து கொண்டு பிரதமர் மோடி தைப்பூசத்திற்கு வாழ்த்து கூறிய நிலையில், தமிழகத்திலிருந்து முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து கூறவில்லை என்றும் அவர் கூறினார்.