அமெரிக்கா – இந்தியாவின் முன்னேற்றத்தை நோக்கி ஒன்றாக அணிவகுத்துச் செல்வோம் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்பை பிரதமர் சந்தித்தார். அப்போது என் சிறந்த நண்பனே எனக் கூறி பிரதமர் மோடியை அதிபர் ட்ரம்ப் ஆரத்தழுவி வரவேற்றார்.
இதையடுத்து இருநாட்டு தலைவர்களும் வெள்ளை மாளிகையில் அமர்ந்து பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினர். அப்போது பேசிய பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் எப்போதும் அமெரிக்காவின் நலனையே முதன்மையாகக் கொண்டிருப்பதை பாராட்டுவதாக கூறினார்.
ட்ரம்பைப் போலவே இந்தியாவின் நலன்களை முதன்மையாகக் கொண்டு பணியாற்றுவது தனக்குக் கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம் எனவும் மகிழ்ச்சியுடன் கூறினார். கடந்த கால அனுபவத்தில் இருந்து அதே நம்பிக்கை மற்றும் உற்சாகத்துடன் அமெரிக்கா – இந்தியாவின் முன்னேற்றத்தை நோக்கி ஒன்றாக அணிவகுத்துச் செல்வோம் எனவும் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய பிரதமர், தனது 3வது பதவிக்காலத்தில், 3 மடங்கு வேகத்தில் செயல்படுவோம் என்று இந்திய மக்களுக்கு உறுதியளித்ததுபோல், அதிபர் ட்ரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் செய்ததைவிட அடுத்த 4 ஆண்டுகள் இருமடங்கு வேகத்தில் செயல்படுவார் என்று நம்புவதாக கூறினார்.
பின்னர் பேசிய அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடிக்கும் தனக்கும் மிகுந்த ஒற்றுமை மற்றும் நட்பு உள்ளதாக கூறினார். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே அற்புதமான வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள போகிறோம் எனவும் கூறினார். மேலும், பிரதமர் மோடி மிகச்சிறப்பாக செயல்படுகிறார் என புகழாரம் சூட்டிய டிரம்ப், இந்தியா உடனான நட்பு வரும் காலங்களில் இன்னும் நெருக்கமாகும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக பிரதமர் மோடியை தொழிலதிபர் எலான் மஸ்க் தனது குடும்பத்துடன் சந்தித்தார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், எலான் மஸ்க் உடனான சந்திப்பின்போது விண்வெளி, தொழில்நுட்பம், புதுமையான கண்டுபிடிப்பு என பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறினார்.
அதேபோல் அமெரிக்கா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸ் மற்றும் இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி ஆகியோரும் பிரதமர் மோடியை சந்தித்தனர்.