தமிழக அரசு அழைப்பு விடுத்த அனைத்துக்கட்சி கூட்டத்தை பாஜக, நாதக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில் 60 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
தொகுதி மறுசீரமைப்பு குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க பதிவு செய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் பாஜக, நாதக, தமாகா ஆகிய கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.
அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் ஜெயக்குமார், இன்பதுரை, காங்கிரஸ் கட்சி சார்பில் செல்வப்பெருந்தகை, பா.ம.க. சார்பில் அன்புமணி ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருமாவளவன் பங்கேற்றனர்.
மேலும், மதிமுக சார்பில் வைகோ, மக்கள் நீதி மையம் சார்பில் கமல்ஹாசன் கூட்டத்தில் பங்கேற்றனர்.
சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோரும் அனைத்திக்கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு வருகை தந்த அனைத்து தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, துரைமுருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இந்த நிலையில் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்புக்கு அனைத்து கட்சி கூட்டம் ஒருமனதாக எதிர்ப்பு தெரிவிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1971ம் ஆண்டு முறையை 30 ஆண்டுகளுக்கு நீட்டித்து அதனை நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிவிக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
தென்மாநில எம்.பி.க்கள் கொண்ட கூட்டு நடவடிக்கை குழு அமைக்கவும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.