டாஸ்மாக் முறைகேட்டின் முதல் குற்றவாளி முதலமைச்சர் ஸ்டாலின்தான் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளிலும் நடத்திய சோதனைகளில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் திமுக அரசைக் கண்டித்து, பாஜக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
அதேபோல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை கைது செய்து சென்னை அக்கரையில் உள்ள திருமண மண்டபத்தில் போலீசார் அடைத்து வைத்தனர். தொடர்ந்து 9 மணி நேரம் கடந்தும் அண்ணாமலை விடுவிக்கப்படாததால் அவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதேபோல் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை கைது செய்த போலீசார் சாலிகிராமத்தில் அவரை அடைத்து வைத்தனர். தொடர்ந்து 9 மணி நேரம் கடந்தும் விடுவிக்கப்படாததால் தமிழிசை சௌந்தரராஜன் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது பெண் நிர்வாகி ஒருவர் மயங்கி விழுந்ததால் அங்கு பதற்றம் நிலவியது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை டாஸ்மாக் முறைகேட்டின் முதல் குற்றவாளி முதலமைச்சர் ஸ்டாலின் தான் என குற்றம் சாட்டினார். மேலும் தமிழகத்தின் சட்டத்துறை அமைச்சரே குற்றவாளியாகத் தான் இருக்கிறார் என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் தவெகவினர் வகுப்பறை மாணவர்கள் போல் செயல்படுவதாக விமர்சித்தார். மேலும் திமுகவின் பி-டீம் தான் விஜய் என விமர்சித்த அண்ணாமலை, தவெகவினர் work from home அரசியல் செய்வதாக விமர்சித்தார்.