நீலகிரி மாவட்டத்தில் இ பாஸ் நடைமுறைப்படுத்தும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்து மீண்டும் பழைய நடைமுறையே தொடர்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வணிகர்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இ பாஸ் நடைமுறை குறித்தும், அதனால் வணிகர்கள் சந்திக்கும் பாதிப்பு குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
இயற்கை எழில் மிகுந்த நீலகிரி மாவட்டம் தமிழகத்தின் தவிர்க்கச் சுற்றுலாத் தளமாகவும் பொதுமக்கள் விரும்பும் தளமாகவும் விளங்கி வருகிறது. கோடைக் காலம் வந்து விட்டால் தமிழகம் மட்டுமல்லாது, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் ஊட்டியை நோக்கிப் படையெடுத்து வருவது வழக்கமாக இருக்கிறது.
கோடை வெயிலைச் சமாளிக்க நீலகிரிக்கு ஒரே நேரத்தில் படையெடுக்கும் பொதுமக்களால் கடும் போக்குவரத்து நெரிசலோடு, நீலகிரியின் பசுமையான சுற்றுச்சூழலும் பாதிப்படைவதாகப் புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இ – பாஸ் நடைமுறைக்கு உத்தரவிட்டதோடு, வார நாட்களில் நாள்தோறும் ஆயிரம் சுற்றுலா வாகனங்களும், வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் சுற்றுலா வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியது.
நீலகிரி மாவட்டத்தில் பெரிய அளவிலான தொழிற்சாலைகளோ, ஐடி நிறுவனங்களோ இல்லாத நிலையில் சுற்றுலாத்துறையை மட்டுமே நம்பியிருக்கும் தங்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக வணிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்
சுற்றுலா வாகனங்களுக்கு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளால் தங்களின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் என சுற்றுலாத்துறையை மட்டுமே நம்பியிருக்கும் வணிகர்கள், சாலையோர வியாபாரிகள், காட்டேஜ் உரிமையாளர்கள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் கூறுகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலை மற்றும் மலைத் தோட்ட காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வரும் நிலையில், சுற்றுலாப்பயணிகளின் வருகை குறையும் பட்சத்தில் மேலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகச் சாலையோர வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
சாலையோர வியாபாரிகள், வணிகர்கள், காட்டேஜ் உரிமையாளர்கள் எனச் சுற்றுலாத் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்து இ பாஸ் நடைமுறையை ரத்து செய்து மீண்டும் பழைய நடைமுறையே தொடர்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு நீலகிரி மாவட்டத்தின் ஒட்டுமொத்த வணிகர் சங்கமும் கோரிக்கை விடுத்துள்ளது.