ஜூன் மாதம் முதல் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்குப் பொங்கல் மற்றும் சாம்பார் வழங்கப்படும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்த அவர், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மூலம் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளதோடு, வகுப்பறையில் குழந்தைகள் அதிக ஈடுபாடு காட்டுவதாகவும் குறிப்பிட்டார்.
காலை உணவுத் திட்டத்தின் மூலம் மாணவர்களின் கல்வித்திறன் அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை வெளியானதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் கீதா ஜீவன், தற்போது முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் 34 ஆயிரத்து 987 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருவதன் மூலம் 17 லட்சத்து 53 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்து வருவதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், வரும் ஜூன் முதல் அரிசி உப்புமாவிற்குப் பதிலாக மாணவர்களுக்குப் பொங்கல் சாம்பார் வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.