பஹல்காம் தாக்குதல் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கூட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த 22ம் தேதி ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள், சுற்றுலா பயணிகள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தேசத்தையே உலுக்கிய இந்த சம்பவத்திற்கு பதிலடியாக சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, விசா ரத்து போன்ற அதிரடி நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்தது. இந்நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெய்சங்கர், ஜெ.பி.நட்டா, நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதேபோல், காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, திமுக சார்பில் திருச்சி சிவா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியுடன், பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அனைத்துக் கட்சிக் கூட்டம் நிறைவு பெற்ற பிறகு பேட்டியளித்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, பஹல்காம் தாக்குதல் சம்பவம் வருத்தம் அளிப்பதாக கூறினார். இந்த விவகாரத்தில் இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.