பயங்கரவாதத்தின் அடையாளமாகப் பாகிஸ்தான் மாறி உள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பழிதீர்க்கும் வகையில் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் கீழ் இந்திய பாதுகாப்புப் படைப் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லியமான தாக்குதல்களை நடத்தியது தொடர்பாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, விங். கமாண்டர் வூமிகா சிங் மற்றும் ராணுவ அதிகாரி கலோனல் சோபியா குரேஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது, இந்தியாவில் பயங்கரவாத நடத்திய தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களின் தொகுப்பு வெளியிடப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பஹல்காமில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கொடூரமானது என்றும், காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சியைத் தடுப்பதே பயங்கரவாதிகளின் நோக்கம் எனவும் தெரிவித்தார்.
காஷ்மீரில் அமைதியைச் சீர்குலைக்கத் திட்டமிட்டு பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறிய அவர், பயங்கரவாதத்தின் அடையாளமாகப் பாகிஸ்தான் மாறி வருவதாகக் குற்றம்சாட்டினார். பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்குறிப்பிட்ட அவர், பயங்கரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான் எனத் தெரிவித்தார்.
பயங்கரவாத முகாம்களை அழிக்க நள்ளிரவு 1.05 மணி முதல் 1.30 மணி வரை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், மொத்தம் 25 நிமிடங்கள் தாக்குதல் நீடித்ததாகவும் கூறினார். மேலும், மத மோதலை தூண்டும் வகையில் இந்தியாவில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், பயங்கரவாதிகளைப் பாகிஸ்தான் ஆதரிப்பது அனைவருக்கும் தெரியும் எனவும் அவர் கூறினார்.