தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை பற்றி மட்டுமே பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளின் பெயர் பட்டியலைக் கொடுத்து அவர்களை ஒப்படைக்க வலியுறுத்தியுள்ளதாகக் கூறினார்.
தீவிரவாதிகளை ஒப்படைக்கும் விஷயத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது பாகிஸ்தானுக்குத் தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.
நீர் பங்கீடு குறித்து பாகிஸ்தான் பேச முயன்ற போதும், சிந்து நதி ஒப்பந்தம் ரத்து என்பதில் இந்தியா உறுதியாக உள்ளதாகக் கூறிய அவர், இந்தியாவிற்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளை முழுமையாக நிறுத்தினால் மட்டுமே நீர் பங்கீடு குறித்துப் பேசப்படும் என்றும் தெரிவித்தார்.
தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை பற்றி மட்டுமே பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் எனக் கூறிய அவர், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வெளியேறுமாறு பாகிஸ்தான் அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் தீவிரவாதத்திற்கு எதிரான ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மகத்தான வெற்றியைப் பெற்றதாகப் பெருமிதம் தெரிவித்த ஜெய்சங்கர், இந்தியாவின் தாக்குதலை நிறுத்தும்படி கெஞ்சியது யார் என்பது சர்வதேச சமூகத்திற்குத் தெரியும் எனக் கூறினார்.