‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது பாகிஸ்தானால் ஏவப்பட்ட 600-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள், இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகளால் அழிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை மேற்கொண்டது. அதற்கு எதிர்வினை ஆற்றும் விதமாக பாகிஸ்தான் ராணுவமும், இந்தியாவின் மேற்கு மாநில எல்லைகளை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டது.
இந்நிலையில், ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது பாகிஸ்தானால் ஏவப்பட்ட 600-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள், இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகளால் அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள், 750-க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் நடுத்தர SAM ஏவுகணைகள், பரந்த அளவிலான ரேடார்கள் மூலம் இணைக்கப்பட்டு, இருமடங்கு வேகத்தில் நிலை நிறுத்தப்பட்டதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானால் ஏவப்பட்ட ட்ரோன்களை தடுப்பதை, இந்த வான் பாதுகாப்பு அமைப்பு உறுதி செய்ததாக தெரிவித்துள்ள ராணுவ அதிகாரிகள், இந்த நடவடிக்கை ட்ரோன் மேலாதிக்கத்தின் கட்டுக்கதைகளை தகர்த்தெறிந்தாகவும் குறிப்பிட்டுள்ளனர்.