‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு முன் அதுகுறித்து பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறிய ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.
டெல்லியில் உள்ள ஹோண்டுராஸ் தூதரகத்தில் நடந்த ஒரு உரையாடலின்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் ஆரம்பக் கட்டத்தில் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்ததாக பேசியிருந்தார்.
மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் அந்த உரையாடலை மேற்கோள் காட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு முன் அதுகுறித்து பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதை ஜெய்சங்கரே ஒப்புக்கொண்டதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், மத்திய அரசின் இந்த செயல்பாடு யாரால் அங்கீகரிக்கப்பட்டது எனவும், அதனால் நாட்டின் விமானப்படை எத்தனை விமானங்களை இழந்தது என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை வெளியுறவுத்துறை அமைச்சகம் பகிரங்கமாக மறுத்துள்ளது. மேலும், இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் ஆரம்பக் கட்டத்தில்தான் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், ஆனால் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்று தவறாகச் சித்தரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்துக்களும் அதையே குறிப்பதாகத் தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை தெளிவாகத் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் தெளிவுபடுத்தியுள்ளது.