பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழு, இன்று பயணத்தை தொடங்குகிறது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை மூலம், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு தெரிவிக்க முடிவு செய்த மத்திய அரசு, பல்வேறு கட்சிகளை சோ்ந்த நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவை 7 எம்.பி.க்கள் தலைமையின்கீழ் அமைத்தது.
இந்தக் குழுவினா் 32 நாடுகளுக்கும், ஐரோப்பிய யூனியனுக்கும் பயணிக்கவுள்ளனா். அதன்படி இன்று தொடங்கும் பயணம், ஜூன் 7-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. முதற்கட்டமாக ஐக்கிய ஜனதா தள எம்பி சஞ்சய் ஜா, சிவசேனா எம்பி ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோா் தலைமை வகிக்கும் குழுக்கள் இன்று பயணத்தைத் தொடங்கவுள்ளன.
சஞ்சய் ஜா தலைமையிலான குழு முதலாவதாக ஜப்பானுக்கும், அதைத் தொடா்ந்து தென்கொரியா, மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூா் ஆகிய நாடுகளுக்கும் பயணிக்கவுள்ளது.
ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான குழு முதலாவதாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கும், அதன்பிறகு லைபீரியா, காங்கோ குடியரசு, சியரா லியோன் ஆகிய நாடுகளுக்கும் பயணிக்கவுள்ளது.
திமுக எம்பி கனிமொழி தலைமையிலான குழு ரஷியா, ஸ்பெயின், கிரீஸ், ஸ்லோவேனியா, லாட்வியா ஆகிய நாடுகளுக்கு நாளை பயணத்தைத் தொடங்கவுள்ளது.
அதேபோல் பாஜக எம்பிக்கள் ரவி சங்கா் பிரசாத், வைஜயந்த் பாண்டா, காங்கிரஸ் எம்பி சசிதரூா், தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே ஆகியோா் தலைமையிலான குழுக்கள் வரும் 24-ஆம் தேதி வெளிநாட்டுப் பயணத்தை தொடங்கவுள்ளன.