ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நிதி ஆயோக் கூட்டத்திற்கு நியாயமான நிதி உரிமையைப் பெறச் செல்லாத ஸ்டாலின் தற்போது செல்ல வேண்டிய காரணம் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்க்கட்சியாக கருப்பு பலூன் காட்டிவிட்டு, ஆளுங்கட்சியாக வெள்ளைக் குடை காட்டியது தான் நீங்கள் என விமர்சித்துள்ள அவர், ரெய்டை பார்த்து யாருக்கு பயம் என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஞானசேகரன் முதல் தெய்வச்செயல் வரை பாலியல் குற்றவாளிகளையும், அவர்கள் பின்னணியில் இருக்கும் “SIR”களையும் பாதுகாக்கும் கைதான் ஸ்டாலினின் கை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
கச்சத்தீவு முதல் காவிரி வரை தமிழ்நாட்டின் உரிமைகளை தாரை வார்த்த நீங்கள், மாநில உரிமை பற்றி பேசினால், மக்கள் சிரிப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் டாஸ்மாக்கில் “தம்பி” அடித்த கொள்ளையில் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் பங்கு இருக்கிறதோ? என்ற சந்தேகம் மக்களிடையே வலுவாக உள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.