பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான பாடம் கற்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமா் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
அந்த வகையில், 122-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உலகம் முழுவதும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை புதிய நம்பிக்கை மற்றும் உற்சாகத்தை கொண்டு வந்திருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.
மேலும், பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான பாடம் கற்பிக்கப்பட்டுள்ளதையும், முழு நாடும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.
பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு இந்தியரின் உறுதிப்பாடு என்று கூறிய அவர், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது நமது வீரர்கள் வெளிப்படுத்திய வீரம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தியதாக தெரிவித்தார்.
நமது வீரர்களின் துல்லிய தாக்குதல் வியக்க வைப்பதாக பெருமிதம் தெரிவித்த பிரதமர், இந்த வெற்றிக்கு வீரர்களின் அசாத்திய துணிச்சல், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் சக்தியும் காரணம் என்று குறிப்பிட்டார்.