கனிமவள கொள்ளையால் மேய்ச்சல் நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றச்சாட்டியுள்ளார்.
மதுரை மாவட்டம் விராதனூரில் நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பில், மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை என்ற பெயரில் ஆடு – மாடுகளின் மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆடு மாடுகளுடன் திரளாக கலந்து கொண்டனர்.
அப்போது ஆடு, மாடுகள் மத்தியில் உரையாற்றிய சீமான், தமிழகத்தில் 12 லட்சம் ஹெக்டேர் மேய்ச்சல் நிலம் இருப்பதாகவும், அவற்றை விமான நிலையம், பேருந்து நிலையம் கட்டுவதற்காக அபகரிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
நொய்யல் ஆறு, வைகை ஆறு சாக்கடைகளாக மாறியுள்ளதாகவும், 32 ஆறுகளில் மண் அள்ளப்பட்டு சீரழிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். வன விலங்குகளை பாதுகாக்க மேய்ச்சலுக்கு தடை விதிப்பதாக கூறுபவர்கள், மலைகளை குவாரிக்காக வெடி பொருட்களை கொண்டு வெடிக்க வைக்கும் போது பாதிக்காதா? என்று சீமான் கேள்வி எழுப்பினார். மாடுகள் மேய்ந்தால் வன விலங்குகள் பாதிக்கப்படும் என்பது பைத்தியக்காரத்தனமானது என்று விமர்சித்தார்.