காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று, அவரது தாயார் மற்றும் சகோதரருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார்.
சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திருப்புவனத்தில் போலீஸ் காவலில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் வீட்டிற்கு சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
மேலும் அஜித் குமாரின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அதிமுக சார்பில், 5 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என இபிஎஸ் தெரிவித்தார்.
பின்னர் பேட்டியளித்த அவர், மறைந்த அஜித்குமாருக்கு நீதி கேட்டு அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டதாகவும், வேறு வழியின்றி தமிழக அரசு வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்ததாகவும் கூறினார்.
காவல்துறைக்கு வந்த அழுத்தத்தால்தான் அஜித்குமார் தாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டிய இபிஎஸ், அதிமுக ஆட்சி அமைந்ததும் அஜித்குமார் சகோதரர் விரும்பிய இடத்தில் அரசு வேலை வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.