காவல்நிலையம் செல்பவர்கள் காவு வாங்கப்படுகிறார்களா? என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
கோவை மாவட்டம் பெரிய கடைவீதி காவல்நிலையத்திற்கு நேற்றிரவு புகாரளிக்க வந்தவர் மேல்தளத்தில் உள்ள உதவி ஆய்வாளர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், இன்று காலையில் பணிக்கு வந்த காவலர்கள் தான் அதைக் கண்டறிந்ததாகவும் வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிப்பதோடு, பலத்த சந்தேகத்தையும் எழுப்புகிறது.
ஏற்கனவே கட்டுப்பாட்டை இழந்த தமிழகக் காவல்துறையினரின் மூர்க்கத்தனத்திற்கு பல அப்பாவிகள் பலியாகியுள்ள நிலையில், ஆளும் அரசின் மீதோ அதன் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் சட்டம் ஒழுங்கின் மீதோ மக்களுக்கு துளியும் நம்பிக்கையில்லை.
எந்தக் கட்டுக்கதைகளைக் கேட்கவும் மக்கள் தயாராக இல்லை. திறனற்ற திமுக ஆட்சியில் அதிகார மதம் பிடித்த அதிகாரிகளின் கையில் தமிழகம் சிக்குண்டுள்ளதை மக்கள் புரிந்து கொண்டனர். எனவே, புகாரளிக்க வந்த நபர் இரவு முழுவதும் காவல்நிலையத்தில் இருந்தது எப்படி யாருக்கும் தெரியாமல் போனது? புகாரளிக்க வந்தவர் தூக்குக்கயிறுடன் காவல்நிலையம் வந்தாரா? எந்தக் காவலர்களும் அதை கவனிக்கவில்லையா? முக்கியமாக புகாரளிக்க வந்தவரிடம் அவரது முழு விலாசத்தையும் பெறுவது தானே முறை, அப்படியிருக்கையில் இறந்தவர் யாரென்றே தெரியவில்லை எனக் காவல்துறை கூறுவது எதை மூடி மறைப்பதற்காக? யாரென்றே தெரியாத ஒருவருக்கு உதவி ஆய்வாளர் அறை வரை எப்படி அனுமதி வழங்கப்பட்டது? காலை பத்து மணி வரை சுத்தம் செய்வதற்காகக் கூட யாரும் உதவி ஆய்வாளரின் அறை பக்கம் ஒதுங்கவில்லையா? ஒருவேளை விசாரணை என்ற பெயரில் அவரும் அடித்துக் கொல்லப்பட்டாரா? போன்ற அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டியது முதல்வர் ஸ்டாலினின் கடமை.
இல்லையேல் கட்டப்பஞ்சாயத்து காவல்துறைக்கு எதிராகவும் இந்த அராஜக ஆட்சி ஒழியவும் மக்கள் போராட்டங்களை தமிழக பாஜக முன்னெடுக்கும் என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.