காசாவை இஸ்ரேல் முழுமையாக ஆக்கிரமிக்க முயல்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்க பல்வேறு நாடுகள் ஆலோசித்து வருகின்றன. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
2023ஆம் ஆண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலால் ஏற்பட்ட போர், தற்போது 22 மாதங்களைக் கடந்து நீடித்து வருகிறது. இந்த போரால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. இந்த போரை முடிவுக்குக் கொண்டு வர பல்வேறு நாடுகள் முயற்சி மேற்கொண்டு வந்தாலும், இதுவரை ஒரு சுமூக தீர்வு எட்டப்படவில்லை.
காசாவின் 80 சதவீத பகுதியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள இஸ்ரேல் எஞ்சிய 20 சதவீத பகுதியையும் ஆக்கிரமிக்க முயல்வதாகத் தகவல் வெளியானது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள இஸ்ரேல் அதிபர், ஹமாஸ் அமைப்பினர் மட்டும் தங்களது ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டால், நாளையே போரை நிறுத்தி விடலாம் எனத் தெரிவித்துள்ளார்.
காசாவை கைப்பற்றுவது நோக்கமல்ல என கூறியுள்ள நெதன்யாகு, ஹமாஸ் அமைப்பினரிடம் இருந்து காசாவை விடுவிப்பதே தங்கள் இலக்கு என விளக்கம் அளித்துள்ளார். மேலும், காசாவில் நிலவும் உணவு தட்டுப்பாடு நீடித்தால் 2 ஆண்டுகளில் அங்கு யாருமே இருக்க மாட்டார்கள் எனவும் எச்சரித்துள்ளார்.
இருப்பினும் இஸ்ரேலின் இந்த விளக்கங்களை பல்வேறு நாடுகள் ஏற்க மறுத்துவிட்டன. பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அதனைத் தனி நாடாக அங்கீகரிப்பது குறித்தும் பல நாடுகள் ஆலோசித்து வருகின்றன.
தனி நாடு அஸ்தஸ்து கோரி பல ஆண்டுகளாகப் பாலஸ்தீனம் போராடி வருகிறது. ஆனால், அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை. ஆனால், இஸ்ரேல் ஹமாஸ் போருக்குப் பிறகு நிலைமை மாறத் தொடங்கியுள்ளது. கடந்தாண்டு, அயர்லாந்து, ஸ்பெயின், நார்வே ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்தன. அண்மையில் பிரான்சும் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க உள்ளதாக அறிவித்தது. தற்போது ஆஸ்திரேலியாவும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது.
இது குறித்துப் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸ், அடுத்த மாதம் ஐநா பொதுச்சபையில் நடைபெறவுள்ள 80வது கூட்டத்தொடரில் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கப் போவதாக அறிவித்துள்ளார். மத்திய கிழக்கில் நடைபெறும் போரையும், காசாவில் நிலவும் பசி, பட்டினி உள்ளிட்டவற்றையும் முடிவுக்குக் கொண்டுவர, பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரிப்பதே சிறந்த முடிவு என விளக்கம் அளித்துள்ளார்.
இதனையடுத்து, அடுத்த மாதம், பிரான்ஸ், மால்டா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரிக்கவுள்ளன. இதன்மூலம் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய கட்டாயத்திற்கு இஸ்ரேல் தள்ளப்படும் எனக் கூறப்படுகிறது.